Posted Date : 06:00 (10/07/2015) Last updated : 06:00 (10/07/2015)
35 ஏக்கர்… ஆண்டுக்கு `18 லட்சம்…இணைய விற்பனையில் கலக்கும் இளம் விவசாயி!தேடலும், புதுமையான முயற்சிகளும் மட்டுமே வெற்றிக்கான சூத்திரங்கள். இதை முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களால்தான் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் போய் விடுகிறது. ஆனால், தெளிவான திட்டமிடலோடு, முயற்சி செய்பவர்கள், வெற்றிக்கனியை சுலபமாகப் பறித்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட வெற்றியாளர்களில் ஒருவர்தான், இளம் விவசாயி ஜெயந்த்.கிராமத்திலேயே குடியிருந்தும் சிலரால், சரியாக விவசாயத்தைக் கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. ஆனால், சென்னையில் கணினித்துறையில் பணியாற்றிக்கொண்டே… தேனி மாவட்டத்தில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயத்தையும் செய்து வருகிறார், ஜெயந்த். அதோடு, தனது விளைபொருட்களை இணையம் மூலமாக விற்பனையும் செய்து வருகிறார்.
போடிநாயக்கனூர் பரமசிவன் கோவிலில் இருந்து, கரடுமுரடான பாறைகள் நிரம்பிய ஒற்றையடிப் பாதையில் 8 கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது, தொடா என்ற பகுதி. இந்தப்பகுதி, தென்மேற்குப் பருவக்காற்று தேகத்தைத் தழுவிச்செல்லும் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது, ஜெயந்த்தின் தோட்டம். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் கணினித்துறை இளைஞர் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல்… மண்ணின் மைந்தராக வேஷ்டி, சட்டையில் விவசாயியாக வரவேற்றார், ஜெயந்த்.
தெம்பு கொடுத்த, ‘பசுமை விகடன்’!
‘‘இந்த இடத்துல எங்க பூர்வீக நிலம் 35 ஏக்கர் இருக்கு. இங்க எந்த வகையிலயும் இயற்கையைச் சேதப்படுத்தாம விவசாயம் செய்றோம். மலையடிவாரத்துல இருக்கிறதால நிலம் சரிவாகத்தானிருக்கும். இதனால மழை பெஞ்சுதுனா, தண்ணீர் நிக்காம கீழ ஓடிடும். தாத்தா காலத்தில தட்டைப்பயறு, மொச்சைனு மானாவாரி வெள்ளாமைதான் பாத்தாங்க. அப்பா விவசாயம் பார்க்க வந்ததும், கீழ் நோக்கிப் போற தண்ணியை அங்கங்க தடுத்து இறவைப் பயிர்களை சாகுபடி செய்ய ஆரம்பிச்சாரு. மா, முருங்கைனு நடவு பண்ணி, மாமரங்களுக்கு இடையில புளிய மரங்களை ஊடுபயிரா வெச்சாரு. அது இப்ப வனம் மாதிரி ஆகிப்போச்சு.
நான் தலையெடுத்ததுக்கப்புறம் புதுமையா ஏதாவது செய்யலாம்னு தோணிக்கிட்டே இருக்கும். எதேச்சையா ‘பசுமை விகடன்’ அறிமுகமானதும் எனக்கு புதுத்தெம்பு கிடைச்ச மாதிரி ஆகிப்போச்சு. ‘விளைபொருட்களை இடைத்தரகர்கள் மூலமா விற்பனை செய்றதை விட, மதிப்புக்கூட்டி நேரடியா விற்பனை செஞ்சா அதிக லாபம் கிடைக்கும்’னு ‘பசுமை விகடன்’ கட்டுரைகள் தொடர்ந்து, எனக்கு சொல்லிக்கிட்டே இருந்துச்சு” என்று சொல்லி இடைவெளி விட்ட ஜெயந்த் தொடர்ந்தார்.
அங்கீகாரம் அவசியம்!
“அதனால, என்னோட படிப்பையும், அப்பாவோட அனுபவத்தையும் இணைச்சு, எங்க தோட்டத்து விளைபொருட்களைச் சந்தைப்படுத்த முடிவு செஞ்சேன். அதற்காக எண்ணைத் தயார்படுத்திக்கிட்டேன். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்துல பழங்கள் மதிப்புக்கூட்டல் பற்றி ஆறு மாத பயிற்சி எடுத்துகிட்டேன்.
என்னோட பண்ணை, ‘அங்ககப் பண்ணை’ என்பதற்கான சான்றிதழையும் பல்கலைக்கழகம் மூலமா வாங்கினேன். இதனால எங்க பண்ணையோட விவரம், ஆன் லைன்ல ஷேர் ஆச்சு. இதன் மூலமா சில வியாபார விசாரணைகள் வந்துச்சு. உடனே, நான் ஒரு வெப்சைட் உருவாக்கினேன். குறைஞ்சபட்சம் மூணு கிலோவுல இருந்து ஆர்டர் வாங்க ஆரம்பிச்சேன். இதனால இடைத்தரகர் பிரச்னையில்லாம மாம்பழத்தையும், புளியையும் நேரடியா விற்க முடிஞ்சது. கூடிய சீக்கிரத்துல ஒரு ‘ஆப்ஸ்’ அமைக்கப் போறேன்.
தரமான பொருள், விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், வாங்குறதுக்கு இங்க ஆட்கள் தயாரா இருக்காங்க. அதுக்கு முதல் தேவை உங்க பண்ணைக்கான சரியான அங்கீகாரம். அடுத்தது, வாடிக்கையாளரின் தேவைக்கேற்ற விற்பனை” என வெற்றி ரகசியம் உதிர்க்கும் ஜெயந்த், வார நாட்களில் சென்னையிலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தோட்டத்திலும் என தேனீயாக சுற்றிச்சுழன்று வேலை பார்க்கிறார்.
ஈரம் காக்கும் தேங்காய் நார்!
“இந்த 35 ஏக்கர் நிலத்துல, அப்பா 900 மா மரங்களை நட்டுட்டாரு. நான், 420 மா மரங்களை நட்டு இருக்கேன். எங்ககிட்ட கல்லாமை (கல்லாமணி), செந்தூரம், அல்போன்சா, இமாம்பசந்த், மல்கோவா, காளப்பாடி, காசாலட்டு, நாட்டு ரகம், ஊறுகாய் ரகம்னு பலவகையான மாமரங்கள் இருக்கு. மரத்துக்கு மரம் 30 அடி இடைவெளியில், இரண்டு அடி விட்டத்தில் வட்டப்பாத்தி எடுத்து, கன்றுகளை நடவு செய்திருக்கோம். மாங்கன்றுகளை சுத்தி, தேங்காய் நார் போட்டு வைச்சிருவோம். 15 நாளைக்கு ஒரு தடவைதான் தண்ணி கட்டுவோம். தேங்காய் நார் போடுறதால, வறட்சி காலத்துலயும் ஈரப்பதம் அப்படியே இருக்கும்.
பூச்சிகளை அழிக்கும் முசுடு!
மரங்கள்ல இயற்கையாகவே இருக்கிற முசுடு எறும்புகளை நாங்க அழிக்கிறது இல்லை. அது ஒரு இயற்கைக் காப்பான். தேவையில்லாத பூச்சிகளை இந்த எறும்புகள் தின்னுடுது. மரத்தின் அடியில படர்ந்திருக்கிற சிலந்தி வலைகளையும் நீக்குறது இல்ல. சிலந்தியும் பூச்சிகளைப் பிடிச்சி தின்னுடுது. பூ பிடிக்குற காலங்கள்ல 10 லிட்டர் தண்ணியில 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிச்சா பூ உதிர்றது இல்லை. மாமரம் 4 வருஷத்துலேயே காய்க்க ஆரம்பிச்சாலும், ஏழாவது வருஷத்துல இருந்துதான் நல்ல மகசூல் கொடுக்கும். இப்ப எங்ககிட்ட மொத்தம் 900 மா மரங்கள், 1,000 புளிய மரங்கள் இருக்கு. மாவுல வருஷத்துக்கு 120 டன் வரைக்கும் மகசூல் எடுத்திருக்கோம்.
இந்த வருஷம் பூ பிடிக்கற சமயத்துல மழை பெய்ஞ்சதால மகசூல் குறைஞ்சிடுச்சு. 30 டன் தான் மகசூல் கிடைச்சிது. இதை இணையம் மூலமா விற்பனை செஞ்சோம். சென்னையில இருக்கிற 90 கடைகள்ல நேரடியாவும் விற்பனை செஞ்சோம். அதனால, கூடுதல் லாபம் கிடைக்குது” என்ற ஜெயந்த் நிறைவாக, விலை மதிக்கமுடியாத மனநிம்மதி!
“அல்போன்சா கிலோ 60 ரூபாய்; மல்கோவா கிலோ 75 ரூபாய்; செந்தூரம் கிலோ 55 ரூபாய்; காசாலட்டு கிலோ 50 ரூபாய்; இமாம்பசந்த் கிலோ 75 ரூபாய்; காளப்பாடி கிலோ 95 ரூபாய்னு விற்பனை செய்றோம். இந்த வருஷம் கிடைச்ச 30 டன்னுக்கும், சராசரியா பார்த்தா கிலோவுக்கு 60 ரூபாய் விலை கிடைச்சது. அந்த வகையில 18 லட்ச ரூபாய் வருமானம். விதை நீக்கி சுத்தம் செய்த புளி 1,600 கிலோ கிடைச்சது. இதை கிலோ, 130 ரூபாய்க்கு விற்பனை செய்ததுல, 2 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது.
மரங்கள் பராமரிப்பு, புளி சுத்தம் செய்து பேக் செய்ய ஆன செலவுக்கு எல்லாம் புளியில கிடைச்ச வருமானம் போனாலும்… மாம்பழத்துல கிடைச்ச வருமானம் அப்படியே லாபம். ஆக, 35 ஏக்கர் மா, புளி மூலமா இந்த வருஷம் 18 லட்ச ரூபாய் லாபம். எந்தத் தொழில்லயும் இந்தளவுக்கு வருமானம் கிடைக்காது. அதை விட விலை மதிக்க முடியாதது, விவசாயத்துல கிடைக்குற மனநிம்மதி” என்று முத்தாய்ப்பாகச் சொன்னார்.
தொடர்புக்கு,
ஜெயந்த்,
செல்போன்: 99620-08974
இயற்கையை இம்சிக்காத பாசனம்! ‘‘எங்க தோட்டம் சரிவா அமைஞ்சிருக்கிறதால தேவைப்படுற இடங்கள்ல 20 அடி நீளம், ஒரு அடி அகலம், 2 அடி ஆழத்துல நீரைத் தேக்கக் குழிகளை அமைச்சிருக்கோம். குழியில எடுத்த மண்ணைப் பக்கத்துலயே கரையா போட்டிருக்கோம். இதனால, பெய்யுற மழைத் தண்ணி, குழிக்குள்ள தேங்கித்தான் அடுத்த பகுதிக்குப் போகும். அதோட பண்ணையில நாலு இடத்துல பண்ணைக்குட்டையும் அமைச்சிருக்கோம். அங்கங்க இருக்கிற சுனைகள்ல இருந்து வழிஞ்சு வர்ற நீரை ஓரு இடத்துல தேக்கி, தொட்டி மாதிரி கட்டியிருக்கோம். அந்தத் தொட்டியில இருந்து குழாய் மூலமா பாசனம் செய்றோம். இங்க முழுக்க முழுக்க, ‘புவி ஈர்ப்பு விசை’ மூலமாகத்தான் பாசனம் நடக்குது. வருஷத்துக்கு நாலு தடவை ஆடு,மாடுகளை இலவசமாக மேய்ச்சலுக்கு அனுமதிப்போம். இதன் மூலமா கிடைக்கிற கழிவுகள் மண்ணுக்கு நல்ல உரமாகிடுது. மரங்களுக்கு இடையில இருக்கிற களைச்செடிகளை மடக்கி வெட்டிப் போட்டு மூடாக்கா பயன்படுத்துறோம். அதுவே கொஞ்ச நாள்ல மட்கி உரமாகிடும். இதனால நிலமும் சூடேறாது” என்கிறார், ஜெயந்த்.
ம.மாரிமுத்து
படங்கள்: வீ.சக்தி அருணகிரி
இயற்கையை இம்சிக்காத பாசனம்! ‘‘எங்க தோட்டம் சரிவா அமைஞ்சிருக்கிறதால தேவைப்படுற இடங்கள்ல 20 அடி நீளம், ஒரு அடி அகலம், 2 அடி ஆழத்துல நீரைத் தேக்கக் குழிகளை அமைச்சிருக்கோம். குழியில எடுத்த மண்ணைப் பக்கத்துலயே கரையா போட்டிருக்கோம். இதனால, பெய்யுற மழைத் தண்ணி, குழிக்குள்ள தேங்கித்தான் அடுத்த பகுதிக்குப் போகும். அதோட பண்ணையில நாலு இடத்துல பண்ணைக்குட்டையும் அமைச்சிருக்கோம். அங்கங்க இருக்கிற சுனைகள்ல இருந்து வழிஞ்சு வர்ற நீரை ஓரு இடத்துல தேக்கி, தொட்டி மாதிரி கட்டியிருக்கோம். அந்தத் தொட்டியில இருந்து குழாய் மூலமா பாசனம் செய்றோம். இங்க முழுக்க முழுக்க, ‘புவி ஈர்ப்பு விசை’ மூலமாகத்தான் பாசனம் நடக்குது. வருஷத்துக்கு நாலு தடவை ஆடு,மாடுகளை இலவசமாக மேய்ச்சலுக்கு அனுமதிப்போம். இதன் மூலமா கிடைக்கிற கழிவுகள் மண்ணுக்கு நல்ல உரமாகிடுது. மரங்களுக்கு இடையில இருக்கிற களைச்செடிகளை மடக்கி வெட்டிப் போட்டு மூடாக்கா பயன்படுத்துறோம். அதுவே கொஞ்ச நாள்ல மட்கி உரமாகிடும். இதனால நிலமும் சூடேறாது” என்கிறார், ஜெயந்த்.